இலங்கையின் விண்வெளி ஆய்வுத் துறையில் புதிய மைல்கல்லாக, “BIRDS-X Dragonfly” என பெயரிடப்பட்ட மூன்றாவது செயற்கைக்கோள் செப்டம்பர் 19 ஆம் திகதி சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ISS) சுற்றுப்பாதையில் செலுத்தப்பட உள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஆர்தர் சி. கிளார்க் மேம்பட்ட தொழில்நுட்ப நிறுவனத்தின் வழிகாட்டுதலுடன், இலங்கைப் பொறியாளர்களால் உருவாக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள் கடந்த ஆகஸ்ட் 24 அன்று நாசாவின் SPX33 ராக்கெட்டில் விண்வெளிக்கு ஏவப்பட்டது.
வருகின்ற திங்கட்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு இந்த செயற்கைக்கோள் ISS-இல் இருந்து தனது பயணத்தைத் தொடங்கவுள்ளது.
இந்த நிகழ்வை ஆர்தர் சி. கிளார்க் நிறுவனம் நேரடியாக ஒளிபரப்பவுள்ளதாகவும், இது இலங்கையின் விண்வெளி வளர்ச்சிக்கான ஒரு முக்கியமான முன்னேற்றமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019இல் ராவணன்-1 மற்றும் 2022இல் KITSUNE எனும் செயற்கைக்கோள்களை தொடர்ந்து, இலங்கையில் ஆராய்ச்சி செயற்கைக்கோளான “BIRDS-X Dragonfly” என்ற மூன்றாவது செயற்கைக்கோள் ஏவப்பட்டது.
இது இலங்கையில் விண்வெளி தொழில்நுட்ப வளர்ச்சியில் மற்றொரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
மேலும், இலங்கை தனது சொந்த திட்டத்திற்கு எந்த மூலதனச் செலவையும் செலவிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.









