சுகயீன விடுமுறையை அறிவித்து ஒன்றிணைந்த அஞ்சல் ஊழியர் சங்கம் நேற்று (12.o6) நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
இன்று (13.06) நள்ளிரவு வரை நாடளாவிய ரீதியில் இந்த பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல் ஊழியர் சங்கத்தின் அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
அஞ்சல் திணைக்களத்தில் நிலவும் ஊழியர் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வை வழங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவிப்பதே இந்த தொழிற்சங்க நடவடிக்கையின் நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், அனைத்து அஞ்சல் ஊழியர்களின் விடுமுறையையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான பிரச்சினைக்கு தீர்வுகளை வழங்க அஞ்சல் திணைக்களம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இவ்வாறான நிலையில், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அஞ்சல் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.