ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, ஏர்பஸ் வழக்குடன் தொடர்புடைய பணமோசடி குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவரை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன, நாமல் ராஜபக்ஷ எம்.பி.யை ரூ. 500,000 ரொக்கப் பிணையிலும், தலா ரூ. 100 மில்லியன் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.
சந்தேகநபருக்கு வெளிநாடு செல்ல தடை விதித்த நீதிமன்றம், அது தொடர்பான உத்தரவை குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு அறிவிக்குமாறும் உத்தரவிட்டது.
மற்றொரு பிணை நிபந்தனையாக, வழக்கின் சாட்சிகளுக்கு இடையூறு விளைவிக்கவோ அல்லது செல்வாக்கு செலுத்தவோ கூடாது என்றும் நீதவான் நாமல் ராஜபக்ஷ எம்.பி.க்கு உத்தரவிட்டார்.
ஏர்பஸ் வழக்கு தொடர்பான பணமோசடி குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போதே இந்த பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
எனினும், சர்ச்சைக்குரிய ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான மற்றொரு வழக்கில் நேற்று (29) விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதால், நாமல் ராஜபக்ஷ எம்.பி. தொடர்ந்தும் விளக்கமறியலில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, அந்த வழக்கு தொடர்பில் அவரை அக்டோபர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் நேற்று (29) உத்தரவிட்டது.
இதற்கிடையில், க்ரிஷ் (Krrish) ஒப்பந்தம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நாமல் ராஜபக்ஷ அக்டோபர் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.








