நாட்டின் சமகால பொருளாதார நிலவரம் தொடர்பில் மதிப்பீட்டை மேற்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழுவொன்று அடுத்த வாரம் இலங்கைக்கு வருகைதரவுள்ளனர்.
நாட்டின் அண்மையகால பொருளாதார நிலவரம் குறித்தும், சர்வதேச நாணய நிதியத்தினால் வலியுறுத்தப்பட்ட பொருளாதார மறுசீரமைப்பு செயற்திட்டங்களின் அடைவுகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்தும் மதிப்பீடு செய்வதற்காகவே இக்குழு வருகைதரவுள்ளது என நிதியமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதிச்செயற்திட்டத்தின்கீழ் இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர் கடனை வழங்குவதற்கான முன்மொழிவுக்கு கடந்த ஆண்டு மார்ச் 20 ஆம் திகதி நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை ஒப்புதலளித்தது. அதன்பிரகாரம் முதற்கட்டமாக 330 மில்லியன் டொலர் கடன்நிதி இலங்கைக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் இலங்கை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட முதலாம் கட்ட மதிப்பீட்டுக்கு கடந்த மாதம் 12 ஆம் திகதி அனுமதி வழங்கிய நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை, அதன்மூலம் இரண்டாம் கட்டமாக 337 மில்லியன் டொலர் நிதியை விடுவிப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கை தொடர்பான இரண்டாம் கட்ட மதிப்பீட்டை இவ்வருடத்தின் முதல் அரையாண்டுக்குள் நிறைவுசெய்வதற்கு உத்தேசித்திருக்கும் நிலையில், எதிர்வருகின்ற கிழமை இடம்பெறவுள்ள சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளின் விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கின்றது.
அதேவேளை இரண்டாம் கட்ட மதிப்பீட்டுக்கு முன்பதாக இலங்கை அதன் உத்தியோகபூர்வ மற்றும் தனியார் கடன்வழங்குனர்களுடன் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடொன்றை எட்டவேண்டியது அவசியமாகும்.