ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் வேட்பாளராக களமிறங்குவதற்கான அறிகுறியை வெளிப்படுத்தியுள்ளார்.
‘நான் ஒரு முக்கியமான கேள்வியை முன்வைக்கிறேன் – நீங்கள் என்னுடன் முன்னேறுவீர்களா?, அல்லது இருட்டில் தடுமாறிக்கொண்டிருப்பவர்களுடன் ஒத்துப்போவீர்களா? இல்லையெனில், இன்னும் பிரச்சினைகளை விளங்கிக்கொள்ளாமல் போராடுவீர்களா?’ என்று அவர் கேட்டுள்ளார்.
இந்த கேள்விகள் அவர் தேர்தலில் போட்டியிடப்போவதற்கான அறிகுறிகளாகவே கருதப்படுகின்றன.
இதன்படி, வேட்பு மனு தொடர்பில் முறையான அறிவிப்பை மாத்திரமே அவர் வெளியிடவேண்டியுள்ளது.
தகவல்களின்படி, தாம் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவதாகவும், அதற்கு ஆதரவைக் கோரியும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அவர் கடிதம் எழுத உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அண்மையில் கண்டிக்கு சென்றிருந்த அவர், அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயகர்களை சந்தித்தமையும், கட்டுக்கலை சித்திவிநாயகர் ஆலயத்துக்கு சென்று வழிபட்டமையும், வேட்பு மனு அறிவிப்புக்கு முன்னதான அவரின் பிரசார தொடக்கமாக கருதப்படுவதாக கருத்துக்கள் வெளியாகியுள்ளன.