டுபாயில் நடைபெறவுள்ள ஐ.நா. சபையின் 28 ஆவது காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் (COP28) கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க டுபாய்க்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று (30) காலை டுபாய்க்கு அவர் புறப்பட்டார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு (COP 28) இன்று (30) முதல் டிசம்பர் 12 வரை அரச தலைவர்கள், அரச மற்றும் தனியார் துறை பிரதிநிதிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்களின் பங்கேற்புடன் டுபாய் எக்ஸ்போ நகரில் நடைபெறவுள்ளது.
இந்த வருட மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன், ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று அமைச்சர்கள், எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இலங்கை இளைஞர் சேவை மன்றத்தின் ஒரு குழுவும் தூதுக் குழுவாகச் சென்றுள்ளனர்.
மேலும், ஜனாதிபதியுடன் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நிதிச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரனும் பயணமானார்.