அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம், வேறு நாடுகளின் கொந்தராத்துக்களை எமது நாட்டில் நடைமுறைப்படுத்துவதற்கான சட்டமாக இருந்தால் அதனை ஆதரிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் “
தற்போது நாட்டில் வாழ முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது. பொருட்களுடைய விலை கட்டுக்கடங்காமல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் மிகவும் பாரதூரமான கஷ்டங்களுக்கு முகங்கொடுத்திருக்கின்றார்கள். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வற் வரியினால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டு, அன்றாட வாழ்க்கையைக் கொண்டுசெல்ல முடியாமல் மக்கள் கஷ்டப்படுகிறார்கள்.
எனவே, அரசாங்கம் இந்த விடயத்தில் கவனஞ்செலுத்த வேண்டும். அரிசி, சீனி போன்ற அத்தியாவசிய பொருட்களைக்கூட வாங்க முடியாமல் மக்கள் திண்டாடுகின்றார்கள். எனவே, இவற்றுக்கான நிவாரணத்தை அரசாங்கம் உடனடியாக மக்களுக்கு வழங்க வேண்டும்.
அத்துடன், திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் நாடளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டுக்கு நன்மைபயக்கக் கூடியதாக, அரசியல் இலாபத்துக்காக எந்தவொரு இனத்தையும் மதத்தையும் குறிவைக்காமல் செயல்படக்கூடிய ஒரு சட்டமாக அது அமைந்தால் ஆதரவு வழங்குவோம்.
அவ்வாறின்றி, சுயநலத்திற்காகவோ அல்லது வேறு நாடுகளின் கொந்தராத்துக்களை எமது நாட்டில் நடைமுறைப்படுத்துவதற்கான திருத்தப்பட்ட சட்டமாக இருந்தால் அதனை ஆதரிக்க முடியாது” என்றும் தெரிவித்தார்.