ஸ்டாவஞ்சரில் நடந்த நோர்வே செஸ் போட்டியின் மூன்றாவது சுற்றில் உலகின் முதல்நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து விளையாடிய பிரக்ஞானந்தா தனது முதல் பாரம்பரிய வெற்றியைப் பதிவு செய்தார்.
இந்தப் போட்டி நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது. நோர்வே செஸ் போட்டியில் மூன்றாவது சுற்றின் முடிவில் 9 புள்ளிகளில் 5.5 புள்ளிகளை பிரக்ஞானந்தா பெற்று முன்னிலையில் இருக்கின்றார்.
இதற்கிடையில், அமெரிக்க கிராண்ட்மாஸ்டர் ஃபேபியோ கருவானா, ஜிஎம் டிங் லிரனுக்கு எதிரான வெற்றியைத் தொடர்ந்து மூன்று முழு புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
பிரக்ஞானந்தாவுக்கு எதிராக துணிச்சலான தொடக்க நடவடிக்கைக்கு விலை கொடுத்த மேக்னஸ் கார்ல்சன், நோர்வே செஸ் திறந்த பிரிவில் ஆறு பேர் கொண்ட தரவரிசையில் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
ஆட்டத்தின் பெரும்பகுதியில் பின்தங்கி இருந்த போதிலும், பிரக்ஞானந்தா வெள்ளைக் காய்களுடன் கார்ல்சனை வீழ்த்தி மூன்று முக்கியமான புள்ளிகளை அடைத்தார்.
கடந்த ஆண்டு உலகக் கோப்பையில் மேக்னஸ் கார்ல்சனிடம் தோல்வியடைந்த பிரக்ஞானந்தாவுக்கு இது ஒரு பெரிய ஊக்கமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் கிளாசிக்கல் செஸ்ஸில் கார்ல்சனை வீழ்த்திய நான்காவது இந்தியர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றுள்ளார்.