அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் முதல் கட்டத்தின் போது போலியான தகவல்களை வழங்கி நன்மைகளைப் பெற்றுக் கொண்டவர்களிடம் இருந்து பணத்தை மீளப்பெறுவதற்கு சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தாம் தயாராக இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர்செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மேன்முறையீடுகளை சமர்ப்பித்த சுமார் 10,000 பேர் நிவாரணம் பெற தகுதியற்றவர்களாக மாறியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
முதலாம் கட்ட நிவாரணத் திட்டத்தில் பெறப்பட்ட 1,227,000 மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளில், சுமார் 212,000 முறைப்பாடுகள் ஒரே தரப்பினரால் பல முறை செய்யப்பட்ட மேன்முறையீடுகள் என்று இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
இதன்படி, மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளின் உண்மையானத் தொகை 966,000 என்று இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அதன்படி, சுமார் 749,000 ஆட்சேபனைகள் மற்றும் மேன்முறையீடுகள் பரிசீலிக்கப்பட்டுள்ளன, மேலும் இரண்டு லட்சம் மேன்முறையீடுகள் பரிசீலிக்கப்பட உள்ளன.
இந்த ஆட்சேபனைகள் மற்றும் முறையீடுகள் காரணமாக சுமார் 10,000 பேர் நிவாரணம் பெற தகுதியற்றவர்களாக மாறியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போலியான தகவல்களின் மூலம் நிவாரணம் பெற்றுக்கொண்ட மக்களிடம் இருந்து பணத்தை மீளப்பெறுவதற்கு சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தாம் தயாராக இருப்பதாக இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மார்ச் மாதம் 22ஆம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட நிவாரணத் திட்டத்திற்கான விண்ணப்பங்களை அனுப்பும் காலம் நாளைய (15) தினத்துடன் நிறைவடையவிருந்த நிலையிலேயே விண்ணப்ப காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இரண்டாம் கட்ட நிவாரணத் திட்டத்திற்கு இதுவரை 130,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.