பதுளை – பண்டாரவளை வீதியின் உடுவரை 6 ஆம் கட்டைப் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக வீட்டினுள் இருந்த மூவர் மண்ணில் புதையுண்டனர்.
பதுளை மாவட்டத்தின் பதுளை, பண்டாரவளை, பசறை, ஹாலிஎல பகுதிகளில் நேற்று (22) பிற்பகல் தொடக்கம் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக மண்சரிவு இடம்பெற்றுள்ளது.
மண்மேடு சரிந்து வீழ்ந்தழ்தில் வீட்டினுள் புதையுண்ட மூவரும் மீட்கப்பட்டு பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இருந்த போதிலும், அவர்களில் விஸ்வநாதன் தனுஷா மற்றும் அன்பழகன் கீர்த்திகா என்ற சுமார் 18 தொடக்கம் 25 வயதிற்கு இடைப்பட்ட இரு யுவதிகள் உயிரிழந்துள்ளதாகவும், மற்றொருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக ஹாலிஎல பொலிஸ் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேவேளை கடும் மழையின் காரணமாக பதுளுஓயா ஆறு பெருக்கெடுத்துள்ளது.
இதனால் பதுளை விஹாரகொடை பகுதியில் உள்ள சுமனதிஸ்ஸகம பகுதியில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததன் காரணமாக சுமார் 70 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
பதுளை மாவட்டத்தின் பதுளை – வெளிமடை வீதியில் புகுல்பொல பகுதியில் தொடர்ந்தும் மண்சரிவு அபாயம் நிலவுவதால் அவ்வீதியினூடான போக்குவரத்து மாலை 6.00 மணிக்கு பிறகு தடைசெய்யப்பட்டுள்ளது.