இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் எண்ணக்கருவிற்கு ஏற்ப ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற ஜனாதிபதி கல்விப் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ. உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (18) காலை 9 மணிக்கு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக இராஜாங்க அமைச்சரும் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான காதர் மஸ்தான் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.
இந்நிகழ்வில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் மாண்புமிகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களது விசேட உரையானது காணொளி வாயிலாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு கல்வி வலயத்திற்குட்பட்ட 472 மாணவர்களும் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட 450 மாணவர்களுக்கும் மொத்தமாக 922 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டது.
மேலும் தெரிவு குடும்பங்களில் உயர்தர மாணவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 6000 ரூபா வீதமும், தரம் 1 முதல் 11 வரையான மாணவர்களுக்கு 3000 ரூபாவும் என 24 மாதங்களுக்கு வழங்கப்படவுள்ளது.
இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடக்குமாகாண ஆளுநரின் செயலாளர், மேலதிக அரசாங்க அதிபர்(நிர்வாகம்), மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதேச செயலாளர்கள், மாகாண கல்விப்பணிப்பாளர், திட்டமிடல் பணிப்பாளர், அதிபர்கள், ஆசிரியர்கள், பிரதேச செயலாளர்கள், அபிவிருத்தி லொத்தர் சபையின் பிரதி முகாமையாளர்,வலயக்கல்வி பணிப்பாளர்கள்,மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.








