ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு முன்னோடியாக புளோரிடாவில் நேற்று (28) மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய பயிற்சிப் போட்டியில் இலங்கையை 20 ஓட்டங்களால் நெதர்லாந்து வெற்றிகொண்டது.
இந்தத் தோல்வி இலங்கை அணிக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
நெதர்லாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 182 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 18.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 161 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.
துடுப்பாட்டத்தில் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்ட இலங்கை பவர் ப்ளே நிறைவில் 4 விக்கெட்களை இழந்து வெறும் 30 ஓட்டங்களையே பெற்றிருந்தது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நெதர்லாந்து 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 181 ஓட்டங்களைக் குவித்தது.
முன்வரிசை வீரர்களின் திறமையான துடுப்பாட்டங்கள் நெதர்லாந்து அணியை வலுவான நிலையில் இட்டது.
இலங்கை தனது இரண்டாவது பயிற்சிப் போட்டியில் அயர்லாந்துடன் எதிர்வரும் 31ஆம் திகதி மோதவுள்ளது. அப் போட்டி லௌடர்ஹில் மைதானத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.