‘‘விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்தவர்களே இன்று தமிழ் பொது வேட்பாளருக்குப் பின்னால் இருக்கின்றனர். நாம் பொதுவேட்பாளரை எதிர்ப்பதனால் எமக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன. ஆனால், இந்த அச்சுறுத்தல்களுக்கு நாம் பயந்து விட மாட்டோம்’’ என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பியான இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை(04) இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த சிங்களத் தலைவர் எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதியாவார். ஆனால், ஒருசில தமிழ் மக்கள் தமிழ் பொதுவேட்பாளர் என்ற ஒருவரைக் களமிறக்கியுள்ளனர். இந்த மனநிலை அவர்களிடையே ஏற்பட சிங்களத் தலைவர்களே காரணம். யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களின் பின்னரும் பொதுவேட்பாளர் என்ற கோஷம் தமிழ் மக்களிடையே வந்துள்ளது என்றால் அதற்கான முழுப்பொறுப்பையும் பெரும்பான்மைச் சமூகத்தின் தலைவர்கள் ஏற்க வேண்டும்.
ஆனால், பொறுப்புள்ள அரசியல் கட்சியாக 75 வருடங்களாக தமிழ் மக்களை வழிநடத்திய கட்சியாக தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானமொன்றை எடுத்துள்ளது. பொதுவேட்பாளர் என்ற விடயத்தை தமிழரசுக் கட்சி ஏற்கவில்லை. நாங்கள் மீண்டும் ஒருமுறை நாட்டின் எதிர்காலத்துக்காக தமிழ் மக்களின் நிரந்த அரசியல் தீர்வுக்காக பெரும்பான்மைச் சமூகத்துக்கு இன்னுமொரு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளோம்.
கடந்த விடுதலைப் போராட்டம் நடந்தபோது இராணுவத்துடன் இணைந்து விடுதலைப் போராட்டத்தை காட்டிக்கொடுத்தவர்கள் மீண்டுமொருமுறை பொதுவேட்பாளருக்கு பின்னால் இருந்துகொண்டு எமது தமிழ் மக்களையும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளையும் காட்டிக்கொடுக்கும் செயற்பாட்டை முன்னெடுக்கின்றனர். இதுவே உண்மை. அதேபோன்று பொதுவேட்பாளரை எதிர்ப்பதனால் பல அச்சுறுத்தல்கள் எமக்கு விடுக்கப்படுகின்றன.
தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்காவிட்டால் உங்கள் அரசியலை அழித்துவிடுவோம் என்றும் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராகாமல் பார்த்துக்கொள்வோம் என்றும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன. இந்த அச்சுறுத்தல்களுக்குப் பயந்து தமிழ் மக்களுக்குத் தேவையான விடயத்தைக் கூறாமல் இருக்கப்போவதில்லை.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பிரதான வேட்பாளரொருவர் வெற்றிபெறுவார். பொறுப்புள்ள அரசியல் கட்சியென்ற வகையில் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய கடமை எமக்குள்ளது’’ என்றார்.