Tamil News Channel

வேகமாக பரவி வரும் ஆபத்தான பக்றீரியா தொற்று…  

அதிகாரப்பூர்வ தரவுகளின் அடிப்படையில் ஜப்பானில் ஆபத்தான பக்றீரியா தொற்று வேகமாக பரவி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Streptococcal Toxic Shock Syndrome (STSS) எனப்படும் குறித்த நோய்க்குறிகளுடன் ஜூன் 2 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம்  977 பேர் பதிவாகியுள்ளனர். இவற்றில் இறப்பு விகிதம் 30% வரை பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

STSS என்பது ஒரு அரிதான ஆனால் தீவிரமான பக்றீரியா தொற்று ஆகும். ஆழமான திசுக்கள் மற்றும் இரத்த ஓட்டத்தில் இந்த பக்றீரியா பரவும் போது இந்நோய் ஏற்படுகிறது.

நோயாளிகள் ஆரம்பத்தில் காய்ச்சல், தசை வலி மற்றும் வாந்தி ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். பின்னர் இது இரத்த அழுத்தம், வீக்கம், உறுப்பு செயலிழப்பு போன்று தீவிர பிரச்சினைகளை ஏற்படுத்தி, உயிருக்கு அச்சுறுத்தலாக மாறும்.

இந்நோய்க்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டாலும் கூட உயிர் ஆபத்துகளை விளைவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு ஏற்பட்ட 10 இல் மூவர் உயிரிழக்கும் சாத்தியம் உள்ளதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க நிலையம்  தெரிவித்துள்ளது.

பெரும்பாலான STSS தொற்றுகள் Group A streptococcus பக்றீரியாவால் ஏற்படுகிறது. இந்த பக்றீரியா குழந்தைகளில் காய்ச்சல் மற்றும் தொண்டை தொற்றுகளை ஏற்படுத்துகிறது.  அரிதான சூழ்நிலைகளில், பக்றீரியம் ஒரு நச்சுத்தன்மையை உற்பத்தி செய்யும் போது  Strep A, இரத்த ஓட்டத்துடன் கலந்து தீவிர உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது.

இது Necrotizing fasciitis எனப்படும் மனிதர்களின் தசையை உண்ணும் பக்றீரியா தொற்றாக மாறி, கை கால்களை இழக்கும் நிலைக்கு இட்டுச்செல்லக்கூடும். மேலும் புற்றுநோய் போன்ற வேறு சில நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவடையவும் இது வழிவகுக்கும்.

திறந்த காயம் உள்ள வயதானவர்கள், சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு STSS பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம் எனக்கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts