நாட்டில் உள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் டிஜிட்டல் மயமாக்குவதுடன் குறுகிய காலத்தில் மக்களுக்கு உயர் தரமான சிகிச்சை சேவைகள் மற்றும் உயர்ந்த பராமரிப்பை வழங்குவதே சுகாதார அமைச்சு மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கம் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பு சிறுவர் வைத்தியசாலையின் சுகாதார தகவல் தொழில்நுட்ப அமைப்பு உத்தியோகபூர்வ திறப்பு மற்றும் மருத்துவமனையின் ஆய்வகத்தின் திசு அறிவியல் துறையின் தரப்படுத்தலை பெறுவதற்காக இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
கொழும்பு சிறுவர் வைத்தியசாலையின் அறுவை சிகிச்சை பிரிவு, மாதாந்த சிகிச்சை பிரிவு, ஆய்வகங்கள், கதிரியல் பிரிவு, உள் நோயாளர் பிரிவு மற்றும் வெளிநோயாளர் பிரிவு என அனைத்து பிரிவுகளும் தற்போது நவீனமயப்படுத்தப்பட்டு முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.
பொதுமக்களுக்கு தரப்படுத்தப்பட்ட ஆய்வக சேவையை வழங்கும் நோக்குடன் கொழும்பு சிறுவர் வைத்தியசாலை ஆய்வகத்தின் திசு அறிவியல் பிரிவு, இலங்கை அங்கீகார வாரியத்தால் (SLAB) ஆய்வகங்களுக்கு வழங்கப்படும் அங்கீகாரத்திற்காக சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் விண்ணப்பித்து, அதற்கமைய அரச மருத்துவமனையில் உள்ள ஆய்வகம் தரப்படுத்தலுக்கு உட்படுவது இதுவே முதல் சந்தர்ப்பமாகும்.
சகல பொது சேவைகளையும் டிஜிட்டல் மயமாக்கி பொதுமக்களுக்கு மிகவும் வசதியான மற்றும் திறமையான சேவையாக மாற்றுவதே தற்போதைய அரசாங்கத்தின் குறிக்கோளாகும். என குறிப்பிட்டார்.







