ஆப்கானிஸ்தானைச் சீரழிக்கும் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக 32 இலட்சம் சிசுக்கள் அபாய கட்டத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலைக்குக் கடந்த 40 ஆண்டுகளாக இடம்பெற்ற யுத்தம் மற்றும் அரச நிர்வாகத்தைக் கையேற்ற தாலிபான்களின் செயல்பாடுகளே முக்கிய காரணிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
வரலாறு காணாத வறுமை ஆப்கானிஸ்தானிய மக்களைத் தாக்கி வருவதாகக் கவலை வெளியிடப்பட்டுள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பல சிசுக்கள் ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாகப் பலியாகி வருவதாக அரச சார்பற்ற நிறுவனங்கள் கவலை வெளியிட்டு வருகின்றன.
ஆப்கானிஸ்தானில் உள்ள சிறிய மருத்துவமனை ஒன்றில் மட்டும் கடந்த ஆறு மாத காலப்பகுதியில் 700 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.
உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் என்பன பல சிரமங்களுக்கு மத்தியில் மட்டுப்படுத்தப்பட்ட உதவிகளை வழங்காதிருந்தால் மரணமாகும் குழந்தைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கும்.
தாலிபான்கள் பலாத்காரமாக அரச நிர்வாகத்தைப் பொறுப்பேற்பதற்கு முன்னர், 2021 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வரை முந்தைய அரசாங்கத்திற்கு நேரடியாக வழங்கப்பட்ட சர்வதேச நிதிகள் ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து பொதுச் சுகாதாரத்திற்கும் வழங்கப்பட்டன.
தாலிபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் ஆப்கானிஸ்தான் வந்ததன் பின், நிதி வழங்கச் சர்வதேசம் கடுமையான தடைகளை விதிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டன.
இதன்காரணமாகவே, தற்போது, ஊட்டச்சத்து காரணமாகப் பல சிறார்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.






