நூறு நாட்களுக்கும் மேலாக நீடித்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் அமெரிக்காவும் ஈரானும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுடன் பிரான்ஸில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, “ஒப்பந்தம் முழுமையாக கையெழுத்தானது” என ட்ரம்ப் தெரிவித்தார்.
ஈரானின் அணுசக்தி திட்டம் மற்றும் பொருளாதார தடைகளை தளர்த்துதல் தொடர்பான விரிவான பேச்சுவார்த்தைகளுக்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளாவிய கப்பல் போக்குவரத்து வழியான ஹோர்முஸ் நீரிணை இந்த வெள்ளிக்கிழமைக்குள் “முழுமையாக திறக்கப்படும்” என்றும், சுவிட்சர்லாந்தில் இதன் முறையான கையெழுத்து விழா நடைபெறும் என்றும் ட்ரம்ப் மேலும் கூறினார்.
ஈரான் தொடர்ந்தும் அணு ஆயுதத்தை பேணாது என ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், “வலுவான கண்காணிப்பு” மூலம் அந்த உறுதிமொழி அமுல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
ஒப்பந்தத்தின் முழு உரை விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேநேரம் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு ஆதரவாக பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட மேலும் 20 நாடுகள் ஒருங்கிணைந்த கடல்சார் மற்றும் கடற்படை நடவடிக்கையை முன்னெடுக்கும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்தார்.
ஈரானுடனான எதிர்கால உறவுகள் குறித்து நம்பிக்கை தெரிவித்த ட்ரம்ப், பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஈரான் தலைவர்களுடன் “சுமுகமாக பழகியதாகவும்”, இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையில் நேர்மறையான உறவை ஏற்படுத்தும் என நம்புவதாகவும் கூறியுள்ளார்.








