ரஷ்யா-உக்ரைன் இடையே 3 ஆண்டுகளாக நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், தீவிரம் காட்டி வருகிறார்.
அதே வேளையில் கடந்த 3 ஆண்டுகளாக அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கிய இராணுவ உதவிகளுக்கு ஈடாக உக்ரைனில் உள்ள கனிம வளங்களை அமெரிக்காவுக்கு வழங்க வேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்தி வருகிறார்.
இதேவேளை சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் அமெரிக்கா-உக்ரைன் இடையே வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தை முடிந்த பின் அமெரிக்கா-உக்ரைன் கூட்டு அறிக்கையை வெளியிட்டது.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட 30 நாள் போர் நிறுத்தத்தை உடனடியாக ஏற்க உக்ரைன் தயாராக இருக்கிறது. இந்த போர் நிறுத்தக் காலம் இரு தரப்பினரின் பரஸ்பர ஒப்பந்தத்தால் நீட்டிக்கப்படலாம்.
இது ரஷ்ய அரசால்ஏற்றுக்கொள்ளப்பட்ட உடனேயே அமலுக்கு வரும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே 30 நாள் போர்நிறுத்தம் திட்டத்திற்கு உக்ரைன் ஒப்புக்கொண்டாலும், ரஷ்யா அந்த திட்டத்தை இன்னும் ஆய்வு செய்து வருவதாகவும், இந்தத் திட்டம் குறித்து அமெரிக்காவிடமிருந்து விளக்கத்திற்காகக் காத்திருப்பதாகவும் ரஷ்யா தரப்பில் கூறப்பட்டது.
புடின்- ட்ரம்ப் இடையிலான பேச்சுவார்தை நடைபெற விரைவாக ஏற்பாடு செய்யப்படும் என ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.








