‘‘மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி கொடுக்கல் வாங்கலில் அர்ஜுன் அலோசியஸிடமிருந்து நிதி பெற்ற அரசியல்வாதிகளின் பெயர் விபரங்கள் வெகுவிரைவில் வெளியிடப்படும்’’ என வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மீதான முதல்நாள் குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

‘‘அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய அறிக்கையில் அடிக்குறிப்பு எழுதியவர்கள் பற்றி ஓரிரு விடயங்களைக் கூறினார். முழுமையாக பெயர் விபரங்களை வெளியிட வேண்டும். பிணைமுறி மோசடி விவகாரம் கடந்த காலங்களில் பரவலாக பேசப்பட்டது. அலோசியஸ் மற்றும் அவரது தந்தை ஆகியோர் கைச்சாத்திட்ட 156 காசோலைகளில் தனியார் வங்கி ஒன்றின் ஊடாக நிதி பரிமாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அலோசியஸிடமிருந்து நேரடியாக நிதி பெற்ற அரசியல்வாதிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த நபருக்கு சொந்தமான நிறுவனத்திலிருந்து மதுபான நிலையங்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள் குறித்த மதுபான நிலையத்துடன் கொடுக்கல் வாங்கல் செய்துள்ளார்கள். ஆகவே, மதுபான நிலையத்தின் உரிமையாளர்கள் எதிர்வரும் காலங்களில் சாட்சி சொல்லவேண்டி வரும்’’ என்றார்.

இதன்போது எழுந்த ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி. ஹர்ஷ டி சில்வா, ‘‘அனைவரையும் பொதுவாக குறிப்பிடாதீர்கள். இதனால் சிறந்தவர்களும் பாதிக்கப்படுவார்கள். ஆகவே பணம் பெற்றுக்கொண்டவர்களின் பெயர்ப்பட்டியலை முழுமையாக வெளியிடுங்கள். நான் முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவேன்’’ என்றார்.

தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் வசந்த சமரசிங்க,

‘‘ஹர்ஷ டி சில்வா எம்.பி. இதற்கு இணக்கம் தெரிவிப்பார் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். அதனால் தான் அவரை மக்கள் மீண்டும் தெரிவு செய்துள்ளனர். அரசாங்க நிதி தொடர்பான குழுவில் இவ்விடயம் தொடர்பில் எதிர்வரும் காலங்களில் பேச நேரிடும். ஒருசிலர் வரலாற்றை மறந்து விட்டு செயற்பட முயற்சிக்கிறார்கள்’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here