11 அறிக்கையிடும் நிறுவனங்களுக்கு எதிராக மொத்தம் 14.6 ரூபாய் மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வு பிரிவு (FIU) அறிவித்துள்ளது.
நிதி பரிவர்த்தனைகள் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளை 2025 அக்டோபர் முதல் 2026 மார்ச் வரை கடைப்பிடிக்கத் தவறியமைக்காக இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் பணமோசடி எதிர்ப்பு மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு நிதி வழங்குவதை எதிர்க்கும் (AML/CFT) ஒழுங்குமுறை அதிகார அமைப்பாக செயல்படும் நிதி புலனாய்வு பிரிவு சட்டத்தின் 19 (1) மற்றும் 19 (2) பிரிவுகளின் கீழ் நிர்வாக அபராதங்களை விதித்துள்ளது.
அந்த நிறுவனங்களில் கண்டறியப்பட்ட இணங்காமை தன்மை மற்றும் தீவிரத்தின் அடிப்படையிலேயே அபராதங்கள் தீர்மானிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அபராதமாக வசூலிக்கப்பட்ட அனைத்து பணமும் ஒருங்கிணைந்த நிதியத்திற்கு வரவு வைக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி உறுதிப்படுத்தியதாக தெரிவித்துள்ளது.
அறிக்கையிடும் நிறுவனங்களிடையே இணக்கத்தை வலுப்படுத்துவதற்கும், இலங்கையின் நிதி முறைமையின் நேர்மையை உறுதிப்படுத்துவதற்குமான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த அமுலாக்க நடவடிக்கை அமைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்தது.






