குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கத்தால் மானியமாக வழங்கப்பட்ட “அஸ்வெசும” கொடுப்பனவு பெறுவோரின் எண்ணிக்கை கடந்த 2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு குறைந்தமை தொடர்பாக நேற்று (11) பாராளுமன்றத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் எழுப்பிய கேள்விக்கு நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் இதற்கான விளக்கத்தை அளித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர், உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவை குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் “அஸ்வெசும” மானியத்தை குறைக்குமாறு வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை செய்யப்பட்டதா என அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ , கடந்த 2023 ஆம் ஆண்டில் “அஸ்வெசும” திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாகவும், அந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்ட உடனேயே அதில் மீண்டும் மதிப்பீடு ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என சட்டத்தின் மூலமே தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் கூறினார்.
அதன்படி முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் தற்போது சான்றுப்படுத்தப்பட்டு வருவதாக கூறிய அமைச்சர், அதனை இந்த மாதத்திற்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த திட்டம் கடந்த 2023 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்படும்போது பயனாளிகள் 1,773,445 பேர் இருந்ததாகவும், ஆனால் அது 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 1,761,116 ஆக பதிவாகியிருந்ததாகவும் பிரதி அமைச்சர் கூறினார்.
அத்துடன் கடந்த 2025 ஆம் ஆண்டில் பயனாளிகளின் எண்ணிக்கை 2,439,917 ஆக பதிவான போதிலும், இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதமாகும்போது பயனாளிகளின் எண்ணிக்கை 1,251,522 ஆக குறைந்துள்ளதாகவும், இதற்கு பல காரணங்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதன்படி தீவிர வறுமை, வறுமை மற்றும் இடர் கொண்ட, மாற்ற நிலை ஆகிய 4 பிரிவுகளின் கீழ் “அஸ்வெசும” நன்மை வழங்கப்பட்டதாக கூறிய அமைச்சர், கடந்த டிசம்பர் மாதத்தில் மாற்ற நிலை பிரிவுக்கான கொடுப்பனவுகளும், இடர் உள்ள பிரிவினருக்கான கொடுப்பனவுகள் கடந்த ஜூன் மாதத்தில் நிறைவடைந்ததாகவும் தெரிவித்தார்.
அதன்படி தற்போது தீவிர வறுமை மற்றும் வறுமை ஆகிய இரு பிரிவுகளுக்கு மாத்திரமே “அஸ்வெசும” நன்மையை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாகவும், இதற்கிடையில் மீண்டும் மதிப்பீட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.








