ஆனையிறவு உப்பளத்தில் கடந்த 14ஆம் திகதியிலிருந்து தமது அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமக்கு கிடைக்க வேண்டிய வரப்பிரசாதங்கள் அனைத்தும் கிடைக்கப் பெறவில்லை எனவும் தம்மை ஒரு அடிமைகள் போன்று நடாத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் உப்பளத்தின் முகாமையாளருக்கு சார்பாக இருப்பவர்களுக்கு மாத்திரம் மாதம் முழுவதும் வேலை வழங்கப்படுவதாகவும் இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் போராட்டக்காரர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் கடந்த 13 ஆம் திகதியிலிருந்து இன்று (26.05.2025) வரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய தீர்வை வழங்குவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தம்முடன் கலந்துரையாடி தமக்கான உரிய தீர்வினை பெற்று தந்து தம்மை வழமை போன்று பணியில் ஈடுபடுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.

[கிளிநொச்சி நிருபர் – ஆனந்தன்]








