ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் 17 சிறுவர்கள் உட்பட 73 பேர் உயிரிழந்ததாக தலிபான் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான்-ஈரான் எல்லையில் உள்ள இஸ்லாம் காலா என்ற நகரத்துக்கு அருகில் நேற்றிரவு இரவு இந்த விபத்து நேர்ந்துள்ளது.
ஈரானில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஆப்கானிஸ்தான் ஏதிலிகளை ஏற்றிச் சென்ற பேருந்தொன்றே பாரவூர்தியொன்றுடனும் உந்துருளியொன்றுடனும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
பேருந்து சாரதியின் அதிகப்படியான வேகம் மற்றும் அலட்சியமே இந்த விபத்துக்கு காரணம் என அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
விபத்தில் பேருந்தில் இருந்த அனைவரும் உயிரிழந்ததுடன், ஏனைய வாகனங்களில் பயணித்த இரண்டு பேரும் பலியானதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதேவேளை, அண்மைய மாதங்களில், தங்கள் தாயகத்தில் நிலவிய மோதலில் இருந்து தப்பிச் சென்ற ஆவணமற்ற ஆப்கானிஸ்தான் ஏதிலிகளை நாடு கடத்தும் நடவடிக்கைகளை ஈரான் முன்னெடுத்து வருகிறது.
கடந்த ஜனவரி முதல் 1.5 மில்லியனுக்கும் அதிகமான ஆப்கான் ஏதிலிகள் ஈரானை விட்டு வெளியேறியுள்ளனர்.
இந்தநிலையில், ஆப்கானிஸ்தானுக்கு திரும்பி வருபவர்களுக்கான வளங்களை பகிர்வதில் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக மனித உரிமைகள் அமைப்புகள் கூறுகின்றன.









