அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் சமர்ப்பித்த முன்மொழிவுகளை சுகாதார அமைச்சுக்கு இலங்கை மருத்துவ பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் இணக்கம் தெரிவித்துள்ளது.
வைத்திய அதிகாரிகளின் பணிச்சூழல் மற்றும் அவர்களுக்கான அங்கீகாரத்தை மேம்படுத்துவது தொடர்பான முன்மொழிவுகள் சிலவற்றை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்வைத்திருந்தது.
இதன்படி தமக்கு வழங்கப்பட்ட பணிக்கு மேலதிகமாகப் பணியாற்றும் விசேட தர மருத்துவ அதிகாரிகள் மற்றும் ஏனைய தரத்திலான மருத்துவ அதிகாரிகளுக்கான கொடுப்பனவுகளை வழங்குவது, ‘இலங்கை மருத்துவ சேவை’ என்ற தனியான பிரிவொன்றை உருவாக்குதல் மற்றும் அதற்குத் தனியான சம்பளக் குறியீட்டை உருவாக்குதல் உள்ளிட்ட முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
இவ்வாறு முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளுக்கு சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன மற்றும் இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல ஆகியோர் கொள்கை ரீதியில் இணக்கம் தெரிவித்திருந்தனர்.
அத்துடன் இலங்கையில் சுகாதாரத் துறையின் வளர்ச்சிக்கும் மருத்துவ அதிகாரிகளின் மேம்பாட்டிற்கும் உறுதுணையாக இருக்கும் ஒன்றியத்தின் செயற்பாடுகளுக்கு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








