இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை இந்திய சங்கம் (Sri Lanka – India Society) ஏற்பாடு செய்த கலாச்சார நிகழ்ச்சி மற்றும் இரவு விருந்து நேற்று (15) மாலை கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தலைமையிலான அரச மற்றும் தனியார் துறையினர் பங்கேற்றனர். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் அவரது துணைவியார் தனுஜா ஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்பும், எதிர்கால ஒத்துழைப்பும் வலியுறுத்தப்பட்ட இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், “சுதந்திர தினம் என்பது சுதந்திரத்தின் கொண்டாட்டம் மட்டுமல்ல; ஜனநாயகம், முன்னேற்றம், ஒற்றுமை ஆகியவற்றின் மதிப்புகளை நினைவூட்டுகிறது” எனக் கூறினார்.
மேலும், இலங்கையின் சவாலான தருணங்களில் இந்தியா வழங்கிய மனிதாபிமான உதவி, சுகாதார துறையில் வழங்கப்பட்ட பங்களிப்பு, கல்வி மற்றும் கலாச்சார பரிமாற்றங்கள் உள்ளிட்டவை சிறப்பாக நினைவூட்டப்பட்டன. இந்தியாவின் 79வது சுதந்திர தினம் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது.
இலங்கை இந்திய சங்கத் தலைவர் யமுனா கணேசலிங்கம், செயலாளர் சரவணன் நீலகண்டன் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் பங்கேற்றனர்.








