அனலைதீவு மற்றும் எழுவைதீவு பகுதிகளின் கல்வி முன்னேற்றத்துக்கான நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தலைமையில் இன்று (16) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
இதில் உரையாற்றிய ஆளுநர், கடந்த காலங்களில் இப்பகுதிகளில் கல்வியை மேம்படுத்த பல முயற்சிகள் எடுக்கப்பட்டபோதும் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கவில்லை எனக் குறிப்பிட்டார்.
கல்வி மேம்பாட்டுக்கான திட்டங்களை தொழில்முறை ரீதியாகவும் நம்பிக்கைக்குரிய நபர்களின் பங்களிப்புடனும் முன்னெடுக்க வேண்டும் என்றும், கட்டுமானங்கள் மட்டுமின்றி உண்மையான அர்ப்பணிப்புடன் செயல்பட்டால்தான் முன்னேற்றம் ஏற்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில், ஆசிரியர்களுக்கான வசதிகளை அதிகரிப்பது, கடல்கடந்து பணியாற்ற விரும்பும் ஆசிரியர்களின் விவரங்களை சேகரிப்பது போன்ற பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. மேலும், வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் இரு தீவுகளையும் நேரில் பார்வையிட்டுப் பின்னர் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்கத் தீர்மானிக்கப்பட்டது.
முதன்மையான நடவடிக்கையாக கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களை இலக்கு வைத்து உதவி வழங்கத் தீர்மானிக்கப்பட்டது. இதற்கான தொடர்ச்சி நடவடிக்கைகளை மாகாணக் கல்விப் பணிப்பாளர் மற்றும் பிரதேச செயலகங்கள் இணைந்து முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்), கல்விப் பணிப்பாளர், ஊர்காவற்றுறை மற்றும் கோப்பாய் பிரதேச செயலர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும், தன்னார்வமாக பங்கெடுக்கும் சமூக அங்கத்தினரும் கலந்து கொண்டனர்.








