இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நியூடெல்லியில் இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவை சந்தித்து, இந்தியாவின் “அயல்நாட்டு முன்னுரிமை” (Neighbourhood First) கொள்கையின் கீழ் இலங்கையின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் இந்தியா தொடர்ந்து ஆதரவாக இருக்கும் என உறுதிப்படுத்தினார்.
இந்த சந்திப்பு குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தனது x பதிவில் குறிப்பிட்டதாவது,
“இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் @sajithpremadasa அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்தியா–இலங்கை உறவுகள் குறித்து கலந்துரையாடினோம். இலங்கையின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் இந்தியா எப்போதும் துணைநிற்கும்,” என குறிப்பிட்டார்.
அதே நாளில், சஜித் பிரேமதாசா இந்திய உலக விவகார கழகம் (ICWA) ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்து கொண்டு, இருநாடுகளுக்கிடையேயான மீனவர்கள் பிரச்சினை குறித்து பேசினார்.
அவர் கூறியதாவது, “மீன்பிடி பிரச்சினை மிகவும் முக்கியமானதும் நீண்டகாலமாக நிலவிவருவதுமானது. இதைத் தீர்க்க இருநாடுகளும் சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் ஒரு தெளிவான மற்றும் நடைமுறை ஒன்றை உருவாக்க வேண்டும்,” என்றார்.
மேலும், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதும் அவசியம் எனவும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.








