இந்தோனேசியாவின் சுலவெசி தீவில் இன்று அதிகாலை 6.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

உள்ளூர் நேரப்படி காலை 11.27 மணிக்கு (0327GMT) குறித்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. மத்திய சுலவெசி மாகாணத்தின் தலைநகர் பலுவுக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 46 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்க மையம் கொண்டிருந்தமை தெரியவந்துள்ளது.

10 கிலோமீட்டர் ஆழத்தில் மாத்திரமே நிலநடுக்கம் ஏற்பட்டதால், தரை அதிர்வின் தீவிரம் அதிகமாக இருந்ததாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேநேரம் சுமார் 10 முறை பின்னதிர்வுகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை உயிரிழப்பு தொடர்பில் சரியான தகவல் வெளியாகாத நிலையில் கட்டிடங்கள் பல சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் அனர்த்த முகாமைத்துவம் மற்றும் வானிலை மையம் நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதையும் உடனடியாக வெளியிடவில்லை.

2018-ல் பலு நகரம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பெரிதும் பாதிக்கப்பட்டது. அந்த அனர்த்தத்தில் 4,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here