தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் ஏற்பட்ட ஆழ்ந்த தாழமுக்கம் இன்று அதிகாலை 2.30 அளவில் திருகோணமலையில் இருந்து கிழக்காக 100 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அது இலங்கையின் கிழக்கு கரையை அண்மித்து வடக்காக நகர்வதாகவும் இன்றைய தினத்துக்குள் அது புயலாக வலுவடையக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்காரணமாக வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டங்களிலும் இன்றைய தினம் 150 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும். அதேநேரம் 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் இடைக்கிடையே மழையுடனான வானிலை பதிவாகக் கூடிய சாத்தியம் நிலவுகிறது.
அத்துடன் வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக் கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்களுக்கு மறுஅறிவித்தல் வரை செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன் நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.








