இலங்கையில் முதல் முறையாக, செவித்திறன் குறைபாடுள்ள நபர்களுக்கான எண்டோஸ்கோபிக் யூஸ்டாச்சியன் குழாய் அறுவை சிகிச்சை (Endoscopic Eustachian Tube Surgery) கடந்த செவ்வாய்க்கிழமை (21) நீர்கொழும்பு மாவட்ட பொது மருத்துவமனையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
இந்த அறுவை சிகிச்சையை இலங்கையின் காது, மூக்கு, தொண்டை (ENT) மற்றும் தலை – கழுத்து அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ரிஸ்னி சக்காஃப் தலைமையிலான மருத்துவர்கள் குழு மேற்கொண்டது.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஊடகங்களுடன் பேசிய டாக்டர் ரிஸ்னி சக்காஃப் கூறியதாவது:
“அன்றைய தினம் இதுபோன்ற மூன்று அறுவை சிகிச்சைகள் நடத்தப்பட்டன. நோயாளிகள் 68 வயதுடைய ஒருவர், 47 வயதுடைய ஒருவர் மற்றும் 11 வயது குழந்தை ஆவர்,”என்று அவர் தெரிவித்தார்.
முன்னர், செவித்திறன் குறைபாடுள்ள நோயாளிகளின் காதுகளில் திரவம் அல்லது சளி தேங்கி இருந்தால்,அதை அகற்ற காதுகுழாயில் ஒரு துளை போடப்படும் பாரம்பரிய முறை பயன்படுத்தப்பட்டது.
இது சில நேரங்களில் காதுக்குழாயை சேதப்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்தியது.
“மூக்கின் வழியாக கேமரா ஒன்று செருகப்பட்டு, யூஸ்டாச்சியன் குழாய் வழியாக திரவம் மற்றும் சளி அகற்றப்படுகிறது. இந்த முறையால் காதுக்குழாய் சேதமின்றி இயல்பான செயல்பாடு மீட்கப்படுகிறது,”என்று டாக்டர் சக்காஃப் விளக்கினார்.
இந்த அறுவை சிகிச்சை சுமார் 30 நிமிடங்கள் மட்டுமே ஆகும் எனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கையில் இது முதல் முறையாக நடத்தப்பட்டாலும், இந்தியா மற்றும் பல ஆசிய நாடுகளில் இந்தச் சிகிச்சை பொதுவாக மேற்கொள்ளப்படுகின்றது என்று டாக்டர் ரிஸ்னி சக்காஃப் மேலும் கூறினார்.
அவரது குழுவின் இந்த முயற்சி, செவித்திறன் குறைபாடுள்ள நோயாளிகளுக்கான சிகிச்சைத் துறையில் புதிய வழிகாட்டுதலாக மதிக்கப்படுகிறது.








