பண்டாரகம, கொத்தலாவல பகுதியில் நேற்று (22) காலை மோட்டார் சைக்கிளில் சென்ற 17 வயது மாணவன், இலங்கை போக்குவரத்து சபைக்கு (SLTB) சொந்தமான பேருந்துடன் மோதியதில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த மாணவர் பண்டாரகம தேசிய பாடசாலையின் 12ஆம் வகுப்பு மாணவன் கார்ப்பரலுமான லோச்சனா லுக்ஷன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் பள்ளியின் நடனக்குழு உள்ளிட்ட பல நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்ததாக பள்ளி வட்டாரங்கள் தெரிவித்தன.
பண்டாரகம – ஹொரண பிரதான வீதியில் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் சென்று கட்டுப்பாட்டை இழந்த மாணவன், பாணந்துறையிலிருந்து ஹொரண நோக்கிச் சென்ற பேருந்தின் பின்புறத்தில் மோதியதில் விபத்து ஏற்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த மாணவன் முதலில் பண்டாரகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் ஹொரண ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக பண்டாரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








