இலங்கையில் தேசிய மற்றும் மாகாணப் பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 36,178 ஆசிரியர் பணியிடங்கள் வெற்றிடமாக உள்ளன என கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இந்தப் பற்றாக்குறையில் தேசியப் பாடசாலைகளில் மட்டும் 1,501 வெற்றிடங்கள் உள்ளதாகவும், ஏனைய 34,677 வெற்றிடங்கள் மாகாணங்களின் கீழ் உள்ள பாடசாலைகளில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
மாகாண வாரியாக வெற்றிடங்கள் வருமாறு:
மேல் மாகாணம் – 4,630
தென் மாகாணம் – 2,513
மத்திய மாகாணம் – 6,318
வடமேற்கு மாகாணம் – 2,990
ஊவா மாகாணம் – 2,780
வடமத்திய மாகாணம் – 1,568
கிழக்கு மாகாணம் – 6,613
சபரகமுவ மாகாணம் – 3,994
வடக்கு மாகாணம் – 3,271
இந்நிலையில், தரம் III (A) ஆசிரியர் சேவையில் சேர்ந்திருந்தும் இதுவரை கடமைகளைப் பொறுப்பேற்காத 353 பட்டதாரிகள், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் பணியமர்த்தப்பட உள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, பிரதமரின் செயலாளர் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள ஆட்சேர்ப்பு மறுஆய்வுக் குழுவிடம் தேவையான கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்றும், வெற்றிடங்களை நிரப்ப உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த அறிவிப்பை நேற்று (21) பாராளுமன்றத்தில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் ஹரிணி அமரசூரிய இதனை வெளியிட்டார்.







