ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையிலான இலங்கையுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் செயற்படத் தயார் எனச் சீனா தெரிவித்துள்ளது.

அத்துடன், முதலீட்டு ஊக்குவிப்பு, தொழில்நுட்ப பரிமாற்றம், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி முயற்சிகளில் இலங்கைக்கு ஆதரவளிக்கத் தயார் எனவும் சீனா குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் சர்வதேச திணைக்கள உப அமைச்சர் சன் ஹையன் (Sun Haiyan) தலைமையிலான சீனத் தூதுக்குழு இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், ஜனாதிபதித் தேர்தலில் அனுரகுமார திசாநாயக்க பெற்ற வெற்றிக்கும், பொதுத் தேர்தலில் அவரது கட்சிக்குக் கிடைத்த வெற்றிக்கும் வாழ்த்து தெரிவித்த சீன உப அமைச்சர், இந்த வெற்றிகளின் பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள பரிமாற்றங்களுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளின் அபிவிருத்தி வாய்ப்புகள் குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன் இரு நாடுகளுக்கும் இடையில் பரஸ்பர நன்மை பயக்கும் நீண்ட கால ஒத்துழைப்பு வேலைத்திட்டத்தை ஏற்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், கல்வித்துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்குப் பயிற்சியளித்து இலங்கையின் மனிதவள மேம்பாட்டை மேம்படுத்தச் சீனா ஆதரவு வழங்கும் எனவும் சீனத் தூதுக்குழு ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here