இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் மீதமுள்ள போட்டிகள் ஒருநாள் தாமதமாக நடத்தப்படவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார்.

இதன்படி, இன்று (13) நடைபெறவிருந்த இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை (14) நடைபெறும். மேலும், முன்னதாக 15 ஆம் திகதி நடத்தப்படவிருந்த மூன்றாவது மற்றும் இறுதி போட்டி நவம்பர் 16 ஆம் தேதி நடைபெறும்.

பாகிஸ்தானில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல் காரணமாக, அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அணியின் வீரர்கள் மற்றும் பணிக்குழுவினர் நாடு திரும்பும் விருப்பம் தெரிவித்திருந்தனர். இதனால், இன்று திட்டமிடப்பட்ட போட்டியை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மற்றும் ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிர்வாகம் இடையே நீண்ட கலந்துரையாடல் நடைபெற்றது. அதன் பின்னர், இலங்கை வீரர்கள் மற்றும் பணிக்குழுவின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என பாகிஸ்தான் தரப்பு தெரிவித்தது.

இதையடுத்து, தொடரை நிறைவு செய்யுமாறு இலங்கை வீரர்களுக்கு ஶ்ரீ லங்கா கிரிக்கெட் பணிப்புரை வழங்கியுள்ளது. அந்த பணிப்புரையை மீறும் வீரர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இரு தரப்புகளின் ஒப்புதலுடன், தொடரின் மீதமுள்ள போட்டிகள் ஒரு நாளுக்கு பிற்போடப்பட்டு நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here