காசாவில் உள்ள பொதுமக்கள் கட்டிடங்கள் மற்றும் வணக்கஸ்தலங்களை இஸ்ரேலிய-அமெரிக்க சிப்பாய் அழித்து, அதற்கான ஆதாரங்களை இணையத்தில் பதிவேற்றியுள்ளதாகவும் , தற்போது அவர் இலங்கையில் இருப்பதாகவும் ஹிந்த் ரஜப் அறக்கட்டளை (HRF) என்ற உரிமைக் குழு தெரிவித்துள்ளது.
இது ஒரு போர்க்குற்றமாக இருக்கலாம் என்பதால், இலங்கை சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அந்த குழு மேலும் தெரிவித்திருப்பதாவது,
டெக்சாஸைச் சேர்ந்த, இஸ்ரேலிய மற்றும் அமெரிக்கக் குடியுரிமை பெற்ற ஜேக் பர்கான்ஸ் எனும் படைவீரர்,603வது போர் பொறியியல் பட்டாலியன் எனப்படும் இஸ்ரேலிய இராணுவப் பிரிவில் பணியாற்றியுள்ளார்.
இவர் அக்டோபர் 7, 2023-க்குப் பிறகு தானாக முன்வந்து இராணுவத்தில் சேர்ந்து, காசாவிற்கு அனுப்பப்பட்டார்.
இவர் காசாவில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளார்.
குறிப்பாக, இராணுவ இலக்குகள் அல்லாத வீடுகள், மசூதிகள், பண்ணைகள் மற்றும் தொழிற்சாலைகள் போன்ற பொதுமக்களின் கட்டிடங்களை இவர் காணப்பட்ட படை பிரிவு அழித்துள்ளது.
இவரது இந்த செயல்களுக்கான ஆதாரங்களை விளக்கும் வகையில்,இவர் சமூக ஊடகங்களில் பதிவிட்ட புகைப்படங்களையும் காணொளிகளையும் HRF கண்டறிந்தது. அவற்றில் ஒன்று, கான் யூனிஸில் அழிக்கப்பட்ட ஒரு கட்டிடத்திற்குள் இவர் ஒரு வெடிகுண்டு கேபிளைப் பிடித்திருப்பதைக் காட்டுகிறது.
மற்றொன்று, இவரது பிரிவின் சின்னத்துடன் கூடிய ஒரு கட்டிடத்தை தகர்க்கும் நடவடிக்கையை காட்டுகிறது என அந்த குழு மேலும் தெரிவித்துள்ளது.
தெளிவான இராணுவக் காரணம் இருந்தாலன்றி, பொதுமக்களின் சொத்துக்களை அழிப்பது சட்டவிரோதமாகும். அப்படி எந்த சட்டங்களும் பின்பற்றப்படவில்லை என்று HRF கூறுகிறது.
குறித்த இராணுவ சிப்பாயை மாத்திரமின்றி காசாவின் சில பகுதிகளை வாழத் தகுதியற்றதாக மாற்றுவதற்கு முழுப் படைப்பிரிவும் பயன்படுத்தப்பட்டதாக அந்த குழு தெரிவித்துள்ளது என இலங்கையின் பிரதான ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.








