வட – கிழக்கு தமிழர் தாயகப்பகுதிகளில்  தொடர்ந்தும் துயரச்சம்பவங்கள் நடந்தேறுவதாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள்து.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஜனாதிபதியை நேரில் சந்தித்து கடிதம் ஒன்றின் மூலம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களுக்கும் முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

குறித்த சந்திப்பின் போது, இலங்கையின் 9வது ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள அனுரகுமார திசாநாயக்கவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

அத்துடன் முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்  ஈழத்தமிழ் மக்களின் எதிர்பார்ப்பையும் நிலைப்பாட்டையும் பிரதிபலிக்கும் எழுத்துமூல கோரிக்கைக் கடிதம் ஒன்றையும் ஜனாதிபதியிடம் நேரில் கையளித்துள்ளார்.

குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தங்களின் ஆட்சி, அதிகாரங்களின் மீது இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் கொண்டுள்ள எதிர்பார்ப்பைப் போலவே, இலங்கைத் தீவின் பூர்வீக இனத்தவர்களான தமிழர்களும், தமது அடிப்படை உரித்துகள் மீதான சாதக நகர்வுகள் தங்கள் ஆட்சிக்காலத்திலேனும் ஈடேறும் என்ற எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள் என்ற செய்தியை, அந்த மக்களின் பிரதிநிதியாக தங்களிடத்தே பதிவுசெய்ய விரும்புகிறேன்.

இந்த நாட்டில், ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ள நேர்ந்த இனவன்முறைப் பாதிப்புகள், அவற்றுக்கு நீதிகோரி மூன்று தசாப்தங்களாக நிகழ்ந்தேறிய போரின் விளைவுகள், போர் மௌனிக்கப்பட்ட பின்னரும் தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கில் வலிந்து மேற்கொள்ளப்படும் கட்டமைக்கப்பட்ட இன, மத, மொழி மற்றும் கலாசாரப் படுகொலைகள், கைதுகள், காணமலாக்கல்கள் உள்ளிட்ட துயரச் சம்பவங்கள் தினம்தினம் அரங்கேற்றப்பட்டு வருவதை அறிந்திருப்பதைப் போலவே, தங்கள் ஆட்சியில் அத்தகைய துயர வரலாறுகள் இடம்பெறாதிருக்கும் என்ற எமது மக்களின் நம்பிக்கையையும் தாங்கள் கரிசனையோடு அணுகுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

அதற்கமைய, ஈழத்தமிழர்களின் அடிப்படை எதிர்பார்ப்புகளையும், அபிலாசைகளையும் உணர்ந்தும், ஏற்றும் செயற்படத்தக்க அரசியற் கூருணர்வும், சகோதரத்துவமும் மிக்க தங்களின் ஆட்சிக்காலம், இலங்கைத் தீவின் துயர வரலாறுகளை மீள நிகழ்த்தாத காலமாக, தேசிய இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு நோக்கிய வரலாற்றின் திருப்பங்கள் நிகழும் காலமாக அமையவேண்டுமெனக் கோருவதோடு, அத்தகைய நகர்வுகள் சார்ந்த தங்களின் பயணத்தில் எமது பரிபூரண ஒத்துழைப்பு உங்களோடு இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here