
இரவுப் பொழுதில் உல்லாச செயற்பாடுகளை அதிகரிப்பதன் மூலம் உள்நாட்டு பொருளாதாரத்தை அதிகரிக்கலாம் என அமைச்சரவை பேச்சாளருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார் .
இதற்கான அமைச்சரவை ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிகாட்டினார்.
இதன்படி, சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் மற்றும் கொழும்பு நகரின் உல்லாச அனுபவங்களை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார் .
அதற்கமைய, ‘கடலோர இரவுப் பொழுது : உறங்காத கொழும்பு’ என்ற தொனிப்பொருளின் கீழ் கொழும்பு கடலோர வீதிகளை அபிவிருத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.
இதன்படி கொள்ளுப்பிட்டி புகையிரத நிலையத்திலிருந்து தெஹிவளை வரையான 7.4 கிலோமீற்றர் தூரம் கொண்ட வீதியை அபிவிருத்தி செய்யும் கருத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் கூறினார்.
இதில் காலி முகத்திடல் தொடக்கம் புனித தோமஸ் ஆரம்ப பாடசாலை வரைக்கும் 400 மீற்றர் தூரமான வலயத்தில் அதிக கவனம் செலுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறினார்.
இதற்கமைய, உத்தேச கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வெளி விவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.







