உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான நடவடிக்கைகளை எதிர்வரும் மார்ச் மாதம் 21 ஆம் திகதியின் பின்னர் ஆரம்பிக்குமாறு எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சியை சேர்ந்த பிரதான கட்சிகள் தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளன.
இதுதொடர்பில் எதிர்க்கட்சித் தரப்பினர் நேற்று (18) தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்தச் சந்திப்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்களான வி. இராதாகிருஷ்ணன், ரவூப் ஹக்கீம், நிசாம் காரியப்பர், சாணக்கியன் இராசமாணிக்கம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஜே.சி. அலவதுவல மற்றும் ரோஹித அபேகுணவர்தன ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த சந்திப்பு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கருத்துத் தெரிவிக்கையில்,
வரவு செலவுத் திட்ட விவாத காலப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சட்டவாக்கத்துறையில் மேற்கொள்ள வேண்டி இருக்கும் பொறுப்புகள் கடமைகளை நிறைவேற்றுவதற்கு இடமளித்து மார்ச் 21ஆம் திகதியின் பின்னர் உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடாகும்.
நாங்கள் தேர்தலை காலந்தாழ்த்த முயற்சிப்பதாக சிலர் கூறுகிறார்கள். புதிதாக பாராளுமன்றத்துக்கு வந்தவர்களுக்கு இது மிகப்பெரிய விடயமாக தெரியாவிட்டாலும் சட்டவாக்கத்துறையில் இடம்பெறும் அரசியலமைப்பு ரீதியான கடமைகள், பொறுப்புகள் தெரிந்திருக்காவிட்டால் இதுதொடர்பில் சகலரும் அதிக புரிதலை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
தேர்தல் ஆணைக்குழுவை ஒரு பொம்மையை போன்று அடையாளப்படுத்துவதற்கு அரசாங்கத்துடன் தொடர்புடைய ஒருசில தலைமைகள் செயற்பட்டிருக்கிறார்கள். தேர்தலை நடத்தும் திகதி, வேட்பு மனுக்களை கோருவதற்கான தினம், தேர்தல் நடவடிக்கைகள் இடம்பெறும் கால எல்லை என்பவற்றை அரசாங்கத்தால் தீர்மானிக்க முடியாது. ஒருசிலர் இந்த செயற்பாடுகளை தவறுதலாக புரிந்துகொண்டுள்ளார்கள்.








