ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்ற பின்னர் செயற்படுத்தப்பட்ட முதலாவது எரிபொருள் விலை திருத்தத்தின்படி, ஒக்ரோபர் மாதம் 01ஆம் திகதியிலிருந்து எரிபொருள் விலை ஓரளவு குறைந்தது.
அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்க முன்னர் தனது பிரச்சார மேடைகளில் வழங்கிய உறுதிகளின் படி, விலை திருத்தம் செய்யப்படவில்லை என்பது தொடர்பில் பல கருத்துக்கள் தற்போது வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், எரிபொருள் விலையைக் குறைத்தால் அதன் இலாபம் பணக்காரர்களுக்கு மாத்திரமே கிடைக்கும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள கூறியுள்ளார்.
இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வரி வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும், எரிபொருள் விலையை குறைப்பதன் மூலம் ஏழை மக்களுக்கு நேரடி நிவாரணம் கிடைக்காது எனவும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
வரிகள் நீக்கப்பட்டு எரிபொருள் விலை குறைக்கப்பட்டால் அதன் பலன் பணக்காரர்களுக்குத்தான் கிடைக்கும் . அதிக எரிபொருளை பயன்படுத்துவது ஏழை மக்கள் அல்ல. ஏழை மக்கள் சில மறைமுக நன்மைகளைப் பெறலாம். ஆனால், பணக்காரர்களுக்கு அதிக நன்மை உண்டு” என தெரிவித்துள்ளார்.
எனினும், எரிபொருள் விலை போக்குவரத்து மற்றும் உணவு உட்பட பல விடயங்களில் தங்கியுள்ளதாகவும் பேராசிரியர் வசந்த அத்துகோரள சுட்டிக்காட்டியுள்ளார்.







