இலங்கை ஏர்லைன்ஸ் ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான ஐரோப்பிய விமான நிறுவனத்திடமிருந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர் லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பில் முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களையும் சாட்சிகளையும் கண்டறிவதற்காக லஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் குற்றவியல் புலனாய்வுத் திணைக்களம் (CID) ஆகியவற்றின் விசேட அதிகாரிகள் குழுவொன்று அவுஸ்திரேலியாவுக்கு பயணிக்கவுள்ளது.
இலஞ்சப் பணம் மாற்றப்பட்டதாக நம்பப்படும் கணக்குகளை வைத்திருந்ததாகக் கூறப்படும் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் நபர்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்து ஆதாரங்களைச் சேகரிப்பதே இந்த பணியின் நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற ஒரு வங்கிக் கணக்கின் உரிமையாளர் எனக் கூறப்படும் W.D. நிமல் பெரேரா அவுஸ்திரேலியாவில் வசிப்பதாக லஞ்ச ஊழல் ஆணைக்குழு ஏற்கனவே நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
முக்கிய சந்தேக நபர்களில் ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நயோமலி விஜேநாயக்க மற்றும் முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் மகன் சமிந்திர ராஜபக்ஷ ஆகியோரும் அடங்குவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இருவரும் தற்போது வெளிநாட்டில் உள்ளனர். கொழும்பு மற்றும் கோட்டை நீதவான் நீதிமன்றங்கள் இருவருக்கும் எதிராக முன்னதாகவே பிடியாணைகளை பிறப்பித்துள்ளன.
லஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திலும், குற்ற புலனாய்வு திணைக்களத்தினால் கோட்டை நீதவான் நீதிமன்றத்திலும் இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ப்ரூணேயில் போலி நிறுவனமொன்றை நிறுவுதல் மற்றும் 2013 இல் இலங்கை ஏர்லைன்ஸ் பத்து விமானங்களை கொள்வனவு செய்தபோது ஐரோப்பிய விமானப் பாதுகாப்பு நிறுவனமொன்றிடம் (European Aeronautic Defence and Space Company) (ADS) இருந்து 1,454,645.54 யூரோ ( 2 மில்லியன் அமெரிக்க டொலர்) லஞ்சம் பெற்றமை தொடர்பில் விசாரணைகள் கவனம் செலுத்துகின்றன.






