2027 மார்ச் மாதத்தில் நான்கு வருடம் நீடிக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாடு காலாவதியாகும் போது இலங்கையின் தற்போதைய சர்வதேச நாணய நிதிய திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் எண்ணியுள்ளதாகவும், அதன் பின்னர் சர்வதேச நாணய நிதியத்துடன் நாட்டின் வழமையான ஈடுபாட்டை தொடரும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பேசிய ரத்நாயக்க, தற்போதைய ஏற்பாடு முடிவடைந்த பின்னர் கடன் மறுசீரமைப்புடன் தொடர்புடைய மற்றொரு சர்வதேச நாணய நிதிய திட்டத்தில் நுழைய வேண்டிய அவசியம் தற்போது அரசாங்கத்திற்கு இல்லை என்றும் கூறினார்.
“நாம் நிச்சயமாக இந்த சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவோம்” எனினும் சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும் சர்வதேச நிறுவனங்கள் ஆகும். உலக பொருளாதார அமைப்புக்குள் செயல்படும் ஒரு நாடாக, அவற்றுடனான எங்கள் தொடர்புகளை எங்களுக்கு பொருத்தமான வகையில் பராமரிக்க வேண்டும்.” எனத் தெரிவித்தார்.
தற்போதைய நான்கு வருட EFF திட்டம் 2023 மார்ச் மாதத்தில் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் அது 2027 மார்ச் 19 அன்று காலாவதியாக திட்டமிடப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு மதிப்பாய்வுகள் உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் கூறுகிறது, அதன் சமீபத்திய பணி ஊழியர் மட்ட உடன்பாடு இன்றி முடிவடைந்த பின்னர் ஏழாவது மதிப்பாய்வு குறித்த கலந்துரையாடல்கள் தொடர்கின்றன.
இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்துடன் மற்றொரு கடன் மறுசீரமைப்பு திட்டம் தேவைப்படும் என அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை என்றும், அதேவேளையில் நாடு பல ஆண்டுகளாக அதன் தற்போதைய கடன் திருப்பிச் செலுத்தும் கடமைகளுக்கு கட்டுப்பட்டதாகவே இருக்கும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முந்தைய நிர்வாகத்தின் கீழ் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட கடன் மறுசீரமைப்பு விதிமுறைகளின் அம்சங்களையும், குறிப்பாக இலங்கையின் பொருளாதார செயல்திறனைப் பொறுத்து சில கடனாளிகளுக்கான திருப்பிச் செலுத்துதல்கள் மாறுபடும் வழிமுறைகளையும் அவர் விமர்சித்தார்.
“நாம் பொருளாதாரத்தை மேம்படுத்துகையில், நாம் திருப்பிச் செலுத்த வேண்டிய கடனின் அளவும் அதிகரிக்கிறது” என கூறிய அவர், இது பொருளாதார வளர்ச்சியின் நன்மைகளை பொதுமக்களுக்கு கடத்துவதற்கு கிடைக்கும் வளங்களை குறைக்கலாம் என்றும் தெரிவித்தார்.
தற்போதுள்ள சில கடன் விதிமுறைகளின் பாதகமான தாக்கமாக அது கருதுவதை குறைக்க, கிடைக்கக்கூடிய நிதிச் சந்தை வழிமுறைகளை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக ரத்நாயக்க கூறினார்.
தற்போதைய EFF ஒப்பந்தத்திற்கு பின்னர் இலங்கையின் சர்வதேச நாணய நிதியத்துடனான உறவு குறித்து கேள்விகள் எழும் நிலையில் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் இந்த கருத்துக்கள் வெளியாகி உள்ளன.
தொடர்ச்சியான திட்டத்திற்கான எந்தவொரு கோரிக்கையும் இலங்கை அரசாங்கத்தின் முடிவாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதிய பணி தலைவர் இவான் பாப்பாஜார்ஜியோ இந்த வாரம் கூறி இருந்தார்.
இதற்கிடையில் செப்டம்பர் 10-23 பணிக்குப் பிறகு ஏழாவது மதிப்பாய்வை முடிக்க தேவையான கொள்கைகள் மற்றும் அளவுருக்கள் குறித்து அரசாங்கத்துடனான கலந்துரையாடல்கள் “குறுகிய காலத்தில்” தொடரும் என சர்வதேச நாணய நிதியம் கூறியது.







