நாட்டை சீர்குலைத்தல் மற்றும் மக்களிடையே குழப்பமான சூழ்நிலையை உருவாக்கும் நோக்கில் செயல்படும் ஒழுங்கற்ற சிவில் அமைப்புகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கு அரசாங்க தகவல் திணைக்களம் சட்டமா அதிபரின் ஆலோசனையைக் கோரியுள்ளது.
இந்த நிறுவனங்கள் தொழில் திணைக்களத்திலோ அல்லது அரச சார்பற்ற நிறுவனங்களின் தேசிய செயலகத்திலோ பதிவு செய்யப்படவில்லை என்பது அவதானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ பண்டார தெரிவித்துள்ளார்.
இதன்படி, இந்த அமைப்புகள் தொடர்பில் தொழில் திணைக்களம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் தேசிய செயலகம் ஆகியவற்றிடம் இருந்து அறிக்கைகள் கோரப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் இந்த அமைப்புகளால் வெளியிடப்படும் சில ஊடக அறிக்கைகள் அரசாங்கத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையில் குழப்பத்தையும் வெறுக்கத்தக்க மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துகளையும் ஏற்படுத்துகின்றன.
கடந்த காலங்களில் விவசாயிகள், நுகர்வோர், சுயதொழிலில் ஈடுபடுவோர் மற்றும் தொழில் முனைவோரைப் பிரதிநிதித்துவப்படுத்திய சில அமைப்புகளின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுந்துள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ பண்டார தெரிவித்துள்ளார்.








