கொழும்பு குற்றவியல் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவின் முன்னாள் நிலையத் தளபதி, முன்னாள் பொலிஸ் பரிசோதகர் துமிந்த ஜயதிலக்க கஞ்சிபானை இம்ரான் பிரான்ஸில் இருந்தால் தன்னால் அவரை இலங்கைக்கு அனுப்பி வைக்க முடியும் எனவும் அதற்கு சட்ட ரீதியான ஆவணமொன்று மாத்திரமே அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

க்ளப் வசந்தவின் கொலை தொடர்பில் குற்றம் சுமத்தப்படும் பாதாள உலகக் கும்பலின் தலைவரான கஞ்சிபானை இம்ரானின் பிறந்தநாள் நிகழ்வில் பிரான்ஸில் இருக்கும் இலங்கை பொலிஸ் பரிசோதகர் கலந்துகொண்டதாக ஊடகமொன்றில் வெளியான செய்திக்கு பதிலளிக்கும் வகையில் காணொளி ஒன்றை வெளியிட்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், நான் ஒரு போதும் பாதாள உலகக் குழுக்களுடன் எந்தவித தொடர்பிலும் இருக்கவில்லை. இருந்ததும் இல்லை. அது எனக்கு தேவையற்ற ஒரு விடயம்.

சேவை செய்து அனைத்தையும் இழந்து தற்போது வெளிநாட்டில் தஞ்சமடைந்து வாழ்ந்து வருகிறேன்.

எனினும், இந்த ஊடகங்கள் பொது மக்களை திசை திருப்பும் சம்பவங்களையே வெளியிட்டு வருகின்றன. இவ்வாறு உள்நோக்கம் கொண்ட கருத்துகள் வெளியிடுவதை தவிர்த்து உண்மையை சரியாக பொது மக்களுக்கு அறியப்படுத்துமாறு ஊடகங்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.

சட்ட ரீதியிலான ஒரு எழுத்துமூல ஆவணம் இருந்தால் நிச்சயமாக எனக்கு கஞ்சிபானை இம்ரானை இலங்கைக்கு அனுப்பி வைக்க முடியும். அந்த சக்தி என்னிடம் உள்ளது. பொதுமக்களுக்கு,பொலிஸாருக்கு அவ்வாறானதொரு சேவை அவசியமெனில் அதனை தயங்காது செய்ய நான் முன்னிற்பேன் எனக் கூற விரும்புகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

பாதாள உலகக் குழு உறுப்பினர்களினால் விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல்கள் காரணமாக கொழும்பு குற்றவியல் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவின் நிலையத் தளபதி , பொலிஸ் பரிசோதகராக செயற்பட்ட துமிந்த ஜயதிலக்க பாதுகாப்புக் கருதி தற்போது வெளிநாட்டில் தஞ்சம் கோரியுள்ளார்.

துமிந்த ஜயதிலக்கவுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களில் கஞ்சிபானை இம்ரானும் ஒருவராக இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே கடந்த நான்கு மாதங்களுக்கு முன் துமிந்த ஜயதிலக்க, பிரான்ஸில் தஞ்சம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் தற்போது க்ளப் வசந்தவின் கொலையின் பின்புலத்தில் கஞ்சிபானை இம்ரான் இருப்பதாகவும் அவர் பிரான்ஸில் வசிப்பதாகவும் தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், துமிந்த ஜயதிலக்க இந்த கருத்துகளை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here