புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் ‘கணேமுல்ல சஞ்சீவ’ படுகொலை வழக்கில் பிரதான சந்தேகநபராகக் கருதப்படும் இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் நேற்று முன்தினம் (13) இரவு கைது செய்யப்பட்டார். நேபாளத்தின் பக்தபூர் மாவட்டம் திப்பஸ் பார்க் பகுதியில் உள்ள ஆடம்பர இல்லமொன்றில் பதுங்கியிருந்தபோது, நேபாள மற்றும் இலங்கை காவல்துறையினர் இணைந்து நடத்திய சிறப்பு நடவடிக்கையில் அவர் வலைவீசப்பட்டார்.

இவருடன் குற்றக் குழுவைச் சேர்ந்த மற்ற நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று நாட்கள் நீடித்த விசேட நடவடிக்கையை உதவி காவல்துறை அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்கள பரிசோதகர் கிஹான் டி சில்வா தலைமையிலான குழு முன்னெடுத்தது. இந்த நடவடிக்கை காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அசங்க கரவிட்ட ஆகியோரின் மேற்பார்வையில், நேபாள காவல்துறை மற்றும் சர்வதேச காவல்துறை உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது.

இஷாராவின் கைது நடைமுறை
‘கெஹெல்பத்தர பத்மே’ மீது நடத்தப்பட்ட விசாரணையின் மூலம் இஷாரா செவ்வந்தி மறைந்திருந்த இடம் கண்டறியப்பட்டது. ரொஹான் ஒலுகல குழு நேபாளத்துக்கு சென்று, அங்குள்ள காவல்துறையுடன் இணைந்து அந்த வீட்டைச் சுற்றிவளைத்து அவரைக் கைது செய்தது.

அந்த நேரத்தில், ரொஹான் ஒலுகலவை கண்டதும் “ஒலுகல சேர்!” எனக் கூறிய இஷாராவுக்கு, அவர் “ஆ… பிள்ளையே, எப்படி இருக்கிறாய்?” என பதிலளித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் விசாரணையில், ஏழு மாதங்களாக நேபாளத்தில் பதுங்கி இருந்ததாகவும், இலங்கைக்குத் திரும்பும் எண்ணம் இருந்தாலும் கைது பயத்தால் தங்கியிருந்ததாகவும் இஷாரா கூறியுள்ளார்.

மற்ற மூவர் கைது – கையூட்டல் முயற்சி தடுக்கப்பட்டது
இஷாரா செவ்வந்தி அளித்த தகவலின் அடிப்படையில், காத்மாண்டுவில் மறைந்திருந்த மற்ற மூவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவரான ‘கம்பஹா பபா’, தம்மை விடுவிக்க 50 இலட்சம் ரூபா கையூட்டல் வழங்க முயன்றபோதும், அதிகாரிகள் அதை நிராகரித்து கைது செய்தனர்.

சாவகச்சேரி பெண் ‘தக்ஷி’ அடையாளம் காணப்பட்டார்
இஷாரா செவ்வந்தியைப் போலவே தோற்றமளிக்கும் சாவகச்சேரி பெண் தக்ஷி, போலி கடவுச்சீட்டுடன் அவரை ஐரோப்பாவுக்கு தப்பவிட திட்டமிட்டதாக விசாரணைகள் வெளிப்படுத்துகின்றன. எனினும், குழுவினர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டதால் அந்தத் திட்டம் தோல்வியடைந்தது.

கொலையின் பின்னணி
கடந்த பிப்ரவரி 19, புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் குற்றக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டார். ‘கெஹெல்பத்தர பத்மே’யின் கட்டளையின் பேரில், முன்னாள் கொமாண்டோ வீரர் ஒருவர் சட்டத்தரணி வேடத்தில் நீதிமன்றத்துக்குள் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தார்.

இஷாரா செவ்வந்தியும் அதே வேடத்தில் இருந்து இந்தக் கொலையை வழிநடத்தியதாக விசாரணைகள் தெரிவிக்கின்றன. கொலையின் பின்னர், அவர் இந்தியாவுக்கு தப்பி சென்று, அங்கிருந்து நேபாளத்தில் பதுங்கியிருந்தார்.

இப்போது அவர் கைது செய்யப்பட்டிருப்பது, சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய முன்னேற்றமாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here