கணேமுல்ல சஞ்சீவவின் கொலையைத் தொடர்ந்து நாட்டில் மீண்டும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுக்கு இடையே இடம்பெற்று வரும் மோதல்கள் குறித்து பொலிஸார் அவதானம் செலுத்தி வருகின்றனர்.
கணேமுல்ல சஞ்சீவவின் குழுவினருக்கும் டுபாயில் தலைமறைவாகியுள்ளதாகக் கூறப்படும் கெஹேல்பெத்தர பத்மேவின் குழுவினருக்கும் இடையே இவ்வாறு மோதல்கள் ஆரம்பமாகியுள்ளன.
அண்மையில், கணேமுல்ல சஞ்சீவ புதுக்கடை நீதவான் நீதிமன்றில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.
இது தொடர்பில், முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னர் கெஹேல்பெத்தர பத்மே இந்த கொலையின் பின்னணியில் செயற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.
அவரது தந்தையின் கொலை தொடர்பில் கணேமுல்ல சஞ்சீவ மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
அதற்குப் பழிவாங்கும் நோக்கிலேயே இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றதாக தற்போது பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தற்போது, கணேமுல்ல சஞ்சீவவின் குழுவினருக்கும் கெஹேல்பெத்தர பத்மேவின் குழுவினருக்கும் இடையே மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்தநிலையில், நேற்று மினுவாங்கொடை – பந்தடுவன சந்திக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினரான கெஹெல பத்தர பத்மேவின் ஆதரவின் கீழ் பணத்தைக் கைமாற்றும் பணியில் ஈடுபட்டுவந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
அவர் தற்போது கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கணேமுல்ல சஞ்சீவவின் குழுவினரே இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.







