இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு அண்மையில் நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட கெஹேல்பத்தர பத்மே உள்ளிட்ட குற்றக் குழுவினரிடம் இருந்து அதிர்ச்சித்தரும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்தவகையில், மித்தெனிய – கண்டேவத்தை பகுதியில் மூவர் கொலை செய்யப்பட்டமையும், மித்தெனிய – தொரகொலயாய பகுதியில் இரண்டு இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவமும் தங்களுக்குத் தெரிந்தே நடத்தப்பட்டதாக அவர்கள் காவல்துறையிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
இந்த நிலையில், கெஹேல்பத்ர பத்மே உள்ளிட்ட ஐந்து பேரும் 72 மணித்தியாலங்கள் தடுப்புக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போதே இந்த விடயங்களை சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது, விசாரணைக்கு உட்பட்டு வரும் ஐந்து பேரில் பெக்கோ சமன் மற்றும் தெம்பிலி லஹிரு ஆகியோர் நேற்று மேல் வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகளால் மித்தெனிய மற்றும் எம்பிலிபிட்டியவிற்கு விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
பின்னர், அவர்களுடன் தொடர்புடைய ஒரு குழுவினரின் வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போது, குறித்த குழுவினர் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், அவர்களது தொலைபேசி இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.








