தலை மன்னார் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 32 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை (07-03-2025) விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு (23/02/2025) உத்தரவிட்டார்.

தமிழ்நாடு மாநிலம் ராமேஸ்வரம்  பகுதியை சேர்ந்த 32 மீனவர்கள் அவர்களின் அதி நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் 5 படகுடன் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து நேற்று (23/02/2025) ஞாயிற்றுக்கிழமை  அதிகாலை கடற்படையினரால் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் வடமத்திய மாகாண கடற் படையினரின் கூட்டு நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .

கைது செய்யப்பட்ட குறித்த 32 இந்திய மீனவர்களும் கடற்படையின் விசாரணைகளின் பின்னர் நேற்று (23/02/2025) மாலை மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளின் பின்னர் 32 மீனவர்களும் மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதியின் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த 32 மீனவர்களையும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை(7-03-2025) விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

[மன்னார் நிருபர்எஸ்.ஆர்.லெம்பேட்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here