கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் அண்மையில் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவியின் மரணத்துக்குப் பொறுப்பு கூறவேண்டியவர் எனக் கூறப்படும் நபரொருவர் தொடர்பான தகவல்களை குறித்த மாணவியின் பெற்றோர் வெளிப்படுத்தியுள்ளனர்.
கொட்டாஞ்சேனை – கல்பொத்த வீதியில் அமைந்துள்ள தொடர்மாடி குடியிருப்பு ஒன்றிலிருந்து விழுந்து, கடந்த 29 ஆம் திகதி 16 வயதுடைய மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்டார்.
இந்தநிலையில், அண்மையில் ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டிருந்த அவரது பெற்றோர் தங்களது மகளின் மரணத்துக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.
இவ்வாறான பின்னணியில் உயிரிழந்த மாணவியின் வீட்டுக்கு, நேற்றைய தினம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் சென்றிருந்தனர்.
அதன்போது, குறித்த அதிகாரிகளுடன் இடம்பெற்ற உரையாடலின்போது, மாணவியின் மரணத்திற்கு பொறுப்புக்கூற வேண்டியவர் எனக்கூறப்படும் நபர் தொடர்பான தகவல்களை உயிரிழந்த மாணவியின் பெற்றோர் வெளிப்படுத்தியிருந்தனர்.
அதன்படி, கடந்த பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி, கொட்டாஞ்சேனையில் உள்ள பிரபல கல்வி நிறுவகம் ஒன்றில் வைத்து அதன் உரிமையாளரால் தமது மகள் அவமானத்துக்கு உள்ளாக்கப்பட்டமையே அவரது மரணத்துக்கான பிரதான காரணம் என மாணவியின் பெற்றோர் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.
குறித்த நபர் அரசியல் கட்சி ஒன்றின் உறுப்பினர் எனவும் அவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்ததாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபர் அவரது கல்வி நிறுவகத்தில் வைத்து, தமது மகளிடம், ‘காவல்துறை முறைப்பாடுகளுடன் தொடர்புபட்டுள்ளமையினால் இனி இங்கே கல்வி கற்க வர வேண்டாம்’ என எச்சரித்திருந்ததாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த சம்பவத்தையடுத்து, தமக்கு உயிர்வாழ்வதற்கு விருப்பமில்லை என தமது மகள் பல தடவைகள் தம்மிடம் கூறியதாகவும் உயிரிழந்த மாணவியின் தாய், மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
‘இங்கும் பல ஆசிரியர்கள் உள்ளனர், உன்னால் அவர்களுக்கும் சிக்கல் ஏற்படலாம் நீ இங்கு வருவதை தவிர்த்துக்கொள்’ என அவர் கூறியமையினால் தமது மகள் மிகவும் உளரீதியாக அழுத்தத்துக்கு உள்ளாகியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், தமது மகளை பாரிய மன அழுத்தத்துக்கு உள்ளாக்கி அவரை உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலைக்கு உள்ளாக்கிய நபர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என, குறித்த மாணவியின் தாயார் வலியுறுத்தியுள்ளார்.








