நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், தேர்தலுக்காக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள 39 ஜனாதிபதி வேட்பாளர்களில் இதுவரையில், 19 வேட்பாளர்களே அவர்களின் கொள்கைப் பிரகடனங்களை வெளியிட்டுள்ளனர்.
மிகுதி 20 வேட்பாளர்களின் கொள்கைப் பிரகடனங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்று அவதானிப்புகளில் தெரியவருகிறது.
அதற்கமைய, ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அநுரகுமார திசாநாயக்க, திலித் ஜயவீர, நாமல் ராஜபக்ஷ ஆகியோர் அவர்களின் கொள்கைப் பிரகடனங்களை தத்தமது தேர்தல் பிரசார மேடைகளில் வெளியிட்டிருந்தனர்.
ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்கள் அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்புகளில் அவர்களின் கொள்கைப் பிரகடனங்களை வெளியிட்டுள்ளனர்.
தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் சார்பில் சங்கு சின்னத்தில் போட்டியிடும் தமிழ்ப் பொது வேட்பாளரான பா.அரியநேத்திரன் நேற்று (03) அவரது கொள்கைப் பிரகடனத்தை வெளி யிட்டுள்ளார்.
இந்நிலையில், ஜனாதிபதி வேட்பாளர் மயில்வா கனம் திலகராஜா எதிர்வரும் 07ஆம் திகதி கொள்கைப் பிரகடனத்தை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
மேலும், சரத் பொன்சேகா, ரொசான் ரணசிங்க உள்ளிட்ட 20 வேட்பாளர்கள் அவர்களின் கொள்கைப் பிரகடனம் தொடர்பில் இதுவரையில் எவ்வித தகவல்களும் வெளிப்படுத்த வில்லை என்பதுடன் கொள்கைப் பிரகடன வெளியீடு தொடர்பான இறுதி அறிவிப்பும் அவர்களிடமிருந்து இதுவரையில் கிடைக்கவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.






