க.பொ.த (G.C.E. Advanced Level) உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.

நாடு முழுவதும் உள்ள 2,362 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் முழுமையாக தயார் நிலையில் உள்ளன. இம்முறை பரீட்சைக்கு பாடசாலை விண்ணப்பதாரர்கள் 246,521 பேரும், தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் 94,004 பேரும் உட்பட மொத்தம் 340,525 விண்ணப்பதாரர்கள் தோற்றவுள்ளனர்.

அத்துடன், பரீட்சைக்காலத்தில் அனைத்து தனியார் வகுப்புகள், பாடத்திட்ட கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் ஊகக் கேள்வித்தாள்கள் கலந்துரையாடல்கள் நாளை (04) நள்ளிரவு 12.00 மணி முதல் தடை செய்யப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்.

பாடசாலை விண்ணப்பதாரர்கள் மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி அட்டைகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. அனுமதி அட்டை பெறாதவர்கள் இன்று இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் சென்று பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் பரீட்சைகள் ஆணையாளர் இந்திகா குமாரி லியனகே, தெரிவிக்கையில் ,

“பிள்ளைகள் பாடத்திட்டத்தை முடித்து பரீட்சைக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். அமைதியாகவும் நல்ல மனநிலையுடன் பரீட்சைக்கு தயாராகவும் கேட்டுக்கொள்கிறேன். வினாத்தாள்களில் எந்த மாற்றமும் இல்லை; கடந்த ஆண்டைப் போலவே இருக்கும். பெற்றோர்களுக்கும் கேட்டுக் கொள்கிறேன், குழந்தைகள் அழுத்தமின்றி பரீட்சையை எதிர்கொள்வதற்கான சூழலை அமைக்கவும்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here